சென்னை: சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக கூட்டரங்கில், 1,000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு ஒப்பந்த செவிலியர்களின் ஊதியத்தொகை ரூ.14,000லிருந்து ரூ.18,000 வரை உயர்த்தப்பட்டது.
மேலும் கோவிட் காலங்களில் பணிபுரிந்த 724 ஒப்பந்த செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை ஏற்று, அந்த பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது, செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதால், அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தேசிய நலவாழ்வுக் குழும் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
