5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர் பயணம் பொங்கல் பண்டிகை களைகட்டியது; பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்: ஜவுளி, கரும்பு, மஞ்சள் விற்பனை மும்முரம்

சென்னை: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரயில்கள், கார், விமானம் மூலம் பயணம் செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஜவுளி, கரும்பு, மஞ்சள் விற்பனை மும்முரமாக நடந்தது. இன்றும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள் என்பதால் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும், 2ம் நாள் மாட்டுப் பொங்கலும், 3வது நாள் கன்னிப் பொங்கல் எனும் காணும் பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை குடும்பத்துடனும், மண் மனம் மாறாமலும் கொண்டாடுவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், 2 மாதங்களுக்கு முன்பே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால், ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களுக்கு மேல் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட் தான் கிடைத்தது.

குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் பொங்கலுக்கு முன்னரும், பின்னரும் ஹவுஸ் புல் ஆகியுள்ளது. மேலும் இனிமேல் யாரும் டிக்கெட் எடுக்க முடியாத அளவுக்கு ‘ரெக்ரட்’ வந்து விட்டது. அதேபோல ஒவ்வொரு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் 200க்கும் அதிகமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சென்னையில் வசிப்போர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர்.

இதனால் வெள்ளிக்கிழமை முதல் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்றும் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமல்லாமல் இன்று முதல் 5 நாளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி வெளியூர் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதியை கருதி இந்த விடுமுறையை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இதையடுத்து நேற்று பிற்பகல் முதல் சொந்த ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் ரயில் நிலையங்களில் பிற்பகல் முதல் கூட்டம் அலைமோதியது. அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல் ஆகியிருந்தது. சிறப்பு பஸ், ஆம்னி பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொங்கல் பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை (நேற்று முன்தினம் நள்ளிரவு) 11,372 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களில் மட்டும் 4 லட்சத்து 88 ஆயிரத்து 780 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 977 பேர் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் திருநாள் பயண காலத்தில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே போல நேற்றும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், 2,790 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதிலும் ஏராளமானோர் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். தனியார் ஆம்னி பஸ் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலமும் நேற்று அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விமானங்கள் மூலம் ஏராளமானோர் பயணம் மேற்கொண்டனர். இதனால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை 5 நாளில் மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றும் நிறைய பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால், இன்றும் ரயில்களில் டிக்கெட் இல்லாத நிலை தான் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி புத்தாடை வாங்குவதற்காக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலை மோதியது. அடுத்து, பொங்கல் பண்டிகை அன்று, அனைத்து வீடுகளிலும் கரும்பு, மஞ்சள் வைத்து கொண்டாடுவார்கள்.

இதனால் கரும்பு, மஞ்சள் போன்ற பொருட்கள் மார்க்கெட்டுகளில் வந்து குவிந்து விற்பனை என்பது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று காய்கறி விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொத்து கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் திருநாளை ஒட்டி, பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* ரூ.3,000 இன்றும் வழங்கப்படும்
12ம் தேதி வரை (இன்று) 96 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையாக ரூ.3 ஆயிரம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நேற்றுடன் (13ம் தேதி) நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்றும் (புதன்கிழமை) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி விடுபட்டவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: