மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3 லட்சமாவது வேலைநாடுநருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்குடன் நடத்தப்படும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000வது நபருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

2021ம் ஆண்டு முதல் ஜனவரி 2026 வரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலமாக தமிழ்நாட்டில் 2,437 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 74,856 வேலையளிப்போர்களும், 15,62,205 வேலைநாடுநர்களும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 5,099 மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,99,999 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் கிடைத்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000வது ேவலை நாடுநருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், கூடுதலாக 10 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கொ.வீர ராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் சி.பழனி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* கோயிலில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பொங்கல் கருணை கொடை ரூ.2,000
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.2,000ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்துசமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் 6,894 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 4,893 தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள் ஆக மொத்தம் 11,787 பணியாளர்களுக்கும், 3,865 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 15,652 பேர் பொங்கல் கருணைக் கொடை பெற்று பயனடைகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: