கூடலூர்: மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். ஒன்றிய அரசால் ஜனநாயகத்துக்கு ஆபத்து. அன்பு காட்டும் இந்தியாவை உருவாக்குவேன் என கூடலூர் பொங்கல் விழாவில் ராகுல்காந்தி பேசினார். நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்பதற்காக மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல்காந்தி நேற்று கூடலூர் வந்தார். தனியார் பள்ளி மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் இறங்கிய ராகுல்காந்தி, அங்கிருந்து கார் மூலம் தனியார் பள்ளிக்கு வந்தார். அங்கு அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமத்துவ பொங்கல் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது ராகுல்காந்திக்கு, ஆசிரியைகள் நெற்றியில் சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு வரவேற்றனர்.
தொடர்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்துகொண்ட ராகுல்காந்தி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து பானையில் பொங்கல் வைத்தார். தொடர்ந்து, பானையில் இருந்து பொங்கலை அவரே எடுத்து கப்களில் வைத்து அங்கு கூடியிருந்த அனைவருக்கும் பரிமாறி மகிழ்ந்தார். அப்போது, அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ‘‘பொங்கலோ… பொங்கல்…’’ என கோஷமிட்டனர். அவர்களுடன் சேர்ந்து, அவரும் ‘‘பொங்கலோ பொங்கல்’’ என தமிழில் தெரிவித்தார்.
தொடர்ந்து, அங்கு தோடர் பழங்குடியின மக்கள் அவருக்கு பாரம்பரிய முறைப்படி, தோடர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து, தோடர், பிற பழங்குடியின மக்கள் மற்றும் ஆசிரியைகள் பாரம்பரிய நடனமாட ராகுல்காந்தியை அழைத்தனர். அதையேற்று ராகுல்காந்தி அவர்களுடன் நடனமாடினார். பழங்குடியின பெண்கள் நடனத்தை சொல்லி தர, அதை பார்த்து ராகுல்காந்தி ஆடினார்.
ராகுலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகளும் நடனமாடினார். மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது கொட்டும் மழையில் ராகுல்காந்தி பேசியதாவது: மழையில் மாணவர்களை உட்கார வைத்ததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இன்று நாம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.
இது தகவல்கள் நிறைந்த யுகம். இங்கு எளிதாக தகவல்களை அணுக முடியும். தகவல்களை பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொண்டு ஞானமாக செயல்படுவதை உறுதிப்படுத்துவது இங்கு கல்வி நிறுவனங்களின் வேலை. நாம் எல்லோருமே ஞானத்தோடு செயல்பட வேண்டும். ஞானம் இல்லாமல் நாம் செயல்பட்டால் இந்த உலகமே மகிழ்ச்சியற்ற இடமாக மாறும். ஞானம் இல்லாமல் இருப்பதால் தான் நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோம். இந்த பள்ளிகள்தான் மாணவர்களை ஞானமுள்ள மனிதர்களாக மாற்றுகிறது.
நான் இந்தப் பள்ளியில் சில மாணவர்களிடம் பேசியபோது, மாணவ, மாணவிகள் உயர்ந்த அரசுப் பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அரசியலுக்கு வருவது பற்றி யாரும் பேசுவதில்லை. மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதற்கான தகுதியையும் குணநலன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும்.
இளம் மாணவர்களை அறிவார்ந்த குடிமக்களாக மாற்றுவதே பள்ளிகளின் கடமை. மக்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டும் இந்தியாவை உருவாக்குவதுதான் எனது போராட்டம். 20 ஆண்டு பொதுவாழ்க்கையில், பணிவே தலைவர்களின் முக்கிய பண்பாக இருக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன். இளம் தலைமுறையினர் ஆட்சியாளர்களை தைரியமாக கேள்வி கேட்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் ஆட்சியாளரால் (ஒன்றிய அரசு) தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. உருவகேலி, பாகுபாடு காட்டுபவர்களை சில நேரங்களில் புறம் தள்ளிவிட வேண்டும். மற்றவர்களிடம் பாகுபாடு காட்டுவது அவர்களின் குறைபாட்டை காட்டுகிறது. ஆட்சியாளர்களால் நம் ஜனநாயக கட்டமைப்பில் ஒரு விரிசல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் தற்போது ஆள்பவர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
* தமிழில் வாழ்த்து
மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி, ‘‘அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்’’ என தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
* கல்வியை தனியார்மயமாக்க கூடாது
மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியபோது, ஒரு மாணவரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘கல்வியை தனியார் மயமாக்ககூடாது. அதேசமயம், தரமான கல்வியை அளிக்க வேண்டும். அதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். நாட்டில் கல்வி மட்டுமல்ல அதற்கான வேலைவாய்ப்பையும் உருவாக்க வேண்டும்.
ஐடி துறை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத்துறை பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். தற்போது சீனா உற்பத்தியில் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. ‘மேட் இன் சைனா’ என்பதை மாற்ற வேண்டும். சிறு குறு தொழில்களையும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும்’ என்றார்.
* பாட்டியிடம் நிறைய கற்றுக்கொண்டேன்
ஒரு மாணவரின் கேள்விக்கு ராகுல் பதிலளிக்கையில், ‘‘நான் எனது சிறுவயதில் எனது பாட்டி இந்திரா காந்தியிடம் நிறைய கற்றுக்கொண்டேன். ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள். தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள். பெண்கள் இன்னும் பல துறைகளில் பங்களிப்பை வழங்க வேண்டும்’’ என்றார்.
* நான் மிகவும் சுட்டி
மாணவியின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், ‘‘பள்ளியில் நான் மிகவும் சுட்டியாக இருந்தேன். பள்ளி நாட்களில் அதிக கேள்விகளைக் கேட்டேன். ஆசிரியர்களுக்கே டஃப் கொடுத்தேன்’’ என்று மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
* இது தகவல்கள் நிறைந்த யுகம். இளம் மாணவர்களை அறிவார்ந்த குடிமக்களாக மாற்றுவதே பள்ளிகளின் கடமை.
