நயினார் சீட்டுக்கு குடுமிப்பிடி

நெல்லை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சியினர் இப்போதே களம் காண துவங்கி உள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டு தற்போது நேர்காணல் நடந்து வருகிறது.

நெல்லை தொகுதியை பொறுத்தவரை தற்போது பாஜவில் சிட்டிங் எம்எல்ஏவாகவும், மாநில தலைவராகவும் இருக்கும் நயினார் நாகேந்திரன் வரும் சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அல்லது விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் ஆகிய ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிகிறது.

எனவே நெல்லை தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். இதற்காக நெல்லை தொகுதியை பெற அதிமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. 30 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதேநேரத்தில் பாஜவும் அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது.

அதில் தாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள் கண்டிப்பாக தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பாஜவினர் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதோடு கூட்டணியால் இந்த தொகுதியில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என கருதுகின்றனர். எனவே நெல்லையை விட்டுத்தர மாட்டோம் என கொக்கரிக்கின்றனர். இதனால் நெல்லை தொகுதி அதிமுகவுக்கா அல்லது பாஜவுக்கா என்பதில் கடும் இழுபறி நிலவுகிறது.

* தொகுதி மாறினாலும் கை கூடுமா?
நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை கடந்த 5 தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டுள்ளார். இதில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். 2 முறை தோல்வியை தழுவியுள்ளார். இந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் பட்சத்தில் 6வது முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் காண்பார். ஆனால் அவரை பொறுத்தவரை ஒரு முறை வெற்றி பெற்றால் மறுமுறை வெற்றி கிடைக்காது. இதனால் தொகுதி மாறினாலும் வெற்றி அவருக்கு கை கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: