ரூ.2 கோடி தங்கத்துடன் ஓடிய சிறுவன் கைது: 2.30 மணி நேரத்தில் சிக்கினான்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பஸ்நிலையம் அருகே டவுன் எக்ஸ்டன்சன் தெருவில் மகாராஷ்டிராவை சேர்ந்த சுகாஷ்(45) என்பவர், தங்க நகைகளை உருக்கி தரும் பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம், மகாராஷ்டிராவை சேர்ந்த 17வயது சிறுவன் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்தான். நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் ஒன்றரை கிலோ தங்க நகைகளை உருக்கி அதை கட்டியாக மாற்றிய சுகாஷ், அருகில் உள்ள நகை கடையில் எடை போட்டு எடுத்து வரும்படி சிறுவனிடம் கொடுத்து அனுப்பினார். தங்க கட்டியுடன் நடந்து சென்ற சிறுவன் திடீரென மாயமானான்.

சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தபோது, சிறுவன் ஆட்டோவில் சென்று ரயில் நிலையத்தில் இறங்கியது தெரிந்தது. இதையடுத்துதனிப்படை போலீசார், அங்கு சென்று இரவு 11 மணியளவில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த சிறுவனை மடக்கி பிடித்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் சிறுவனை தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நேற்று அடைத்தனர். தங்கத்துடன் மாயமான சிறுவனை 2.30 மணி நேரத்தில் பிடித்த தனிப்படை போலீசாரை எஸ்.பி பாராட்டினார்.

Related Stories: