பட்டிகளில் புகுந்து ஆடு திருடும் கும்பல்

தர்மபுரி, அக்.26: தொப்பூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களில், பட்டிக்குள் புகுந்து ஆடு திருடும் கும்பலை கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, தொப்பூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், தங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் சிறிய ஓட்டு வீடு கட்டிக்கொண்டு, மீதமுள்ள நிலத்தில் கம்பு, சோளம், தினை, ராகி, கடலை போன்ற பயிர்களை மானாவாரியாக பயிரிட்டு வருகின்றனர். மேலும், உபதொழிலாக ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இது போல் தனியாக உள்ள வீடுகளை கண்காணித்து, ஒரு கும்பல் இரவு நேரங்களில் பட்டியில் புகுந்து ஆடுகளை திருடி செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பப்பிரெட்டியூர் கொட்டாய் கிராமத்தில் ஆடுகள் மற்றும் உடமைகளை திருட மர்ம கும்பல் நடமாட்டம், காணப்பட்டுள்ளது. இதனால், தொப்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள், தங்களது இரவு தூக்கத்தை தொலைத்து, காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, ஆடு திருடும் மர்ம கும்பலை கண்டுபிடித்து கைது செய்து, ஆடு, மாடுகளை பாதுகாக்க போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பட்டிகளில் புகுந்து ஆடு திருடும் கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: