மாகேயில் பள்ளி அருகே காரில் வந்து போதை பவுடர், கஞ்சா விற்ற 2 பேர் கைது

புதுச்சேரி, ஜூன் 27: புதுச்சேரி மாநிலம், மாகே பள்ளூரில் கடந்த வாரம் எம்டிஎம்ஏ எனும் போதை பொருள் விற்ற 2 நபரை காவல்துறை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து எஸ்ஐ அஜய்குமார் தலைமையிலான போலீசார் நேற்று, மாகே பள்ளூர், குஞ்சிபுரமுக்கு பகுதியிலுள்ள நடனப்பள்ளி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு உயர்நிலைப்பள்ளி அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற ஒரு காரை மடக்கி அதிலிருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.

காரை சோதனை செய்தபோது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான எம்டிஎம்ஏ எனும் போதை பவுடர் (800 மில்லி கிராம்) மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 53 கிராம் கஞ்சா பொட்டலங்களை 2 பேர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரிலிருந்த மற்றொரு நபர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி கீழே இறங்கி, அருகில் தயாராக இருந்த மற்றொரு காரில் தப்பிஓடி விட்டார். இதையடுத்து உஷாரான போலீசார், கைவசம் சிக்கிய 2 பேரை கைது செய்து விசாரணை செய்ததில், மணியூர்வயல் பகுதியைச் சேர்ந்த அக்‌ஷய் பாபு என்ற அக்கு (26), முகமது நாசிம் (20) என்பதும், இவர்கள் மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்க அங்கு நின்றிருந்ததும் தெரியவந்தது. இவர்கள் மீது போதை பொருள் தடுப்பு வழக்கை பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து தப்பியோடிய முக்கிய புள்ளியை போலீசார் கைது செய்தனர்.

The post மாகேயில் பள்ளி அருகே காரில் வந்து போதை பவுடர், கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: