நிதிஷ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றார் மஞ்சி: பா.ஜ கூட்டணியில் இணைகிறார்

பாட்னா: பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசுக்கு முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் மகாபந்தன் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக லாலுபிரசாத் இளைய மகன் தேஜஸ்வி யாதவும் உள்ளனர். இந்த அணியில் காங்கிரஸ் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியும் இடம் பிடித்து இருந்தது. மஞ்சி கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

மஞ்சி மகன் சந்தோஷ் சுமன் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தார். இந்தநிலையில் மஞ்சி கட்சியை ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைக்கும்படி நிதிஷ்குமார் வலியுறுத்தினார். இதை மஞ்சி ஏற்கவில்லை. இதையடுத்து சந்தோஷ் சுமன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது பா.ஜவுக்கு மஞ்சி உளவுபார்ப்பதாக நிதிஷ்குமார் குற்றம் சாட்டினார். இந்தநிலையில் பீகார் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மஞ்சி அறிவித்து உள்ளார். அதை தொடர்ந்து பா.ஜ கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் மகாபந்தன் அணிக்கு தற்போது 160 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.

The post நிதிஷ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றார் மஞ்சி: பா.ஜ கூட்டணியில் இணைகிறார் appeared first on Dinakaran.

Related Stories: