திருவாரூர்: பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள், மகனால் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட தாய், தந்தை, பெற்றோர் பாரம் என்று முதியோர் காப்பகத்தில் சேர்ப்பது, எனது மனைவி மற்றும் பிள்ளைகள்தான் முக்கியம் என்று இருப்பவர்களைத்தான் தற்போதைய காலகட்டத்தில் பார்க்க முடிகிறது. இதுபோன்ற சுயநலவாதிகளுக்கு மத்தியில் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு ரூ.5 கோடி செலவில் ஆக்ராவில் இருப்பது போன்ற தாஜ்மஹாலை நினைவு இல்லமாக மகன் கட்டியிருக்கும் சம்பவம் திருவாரூர் அருகே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாக கொண்டவர்கள் அப்துல் காதர்- ஜெய்லானி பீவி தம்பதி. இவர்களுக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
அப்துல் காதர், சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்திருக்கிறார். இவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூதிற்கு 11 வயது இருக்கும்போது தந்தை அப்துல்காதர் இறந்து விட்டார். இதனையடுத்து ஜெய்லானி பீவி, அந்த கடையை நிர்வகித்ததுடன் தனது குழந்தைகள் 5 பேரையும் மிகுந்த சிரமத்திற்கிடையே நன்கு படிக்க வைத்திருக்கிறார். இதில், அம்ருதீன் ஷேக் தாவூது பி.ஏ படித்து விட்டு தற்போது சென்னையில் நெல் அரவை மில், ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். சிறுவயது முதல் தன்னை தனது தாய் அரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கியதால் தனது அன்னையின் வழிகாட்டுதலின் படியும், அவரிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு செயலையும் செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் மரணமடைந்திருக்கிறார். தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் தாயின் நினைவலைகளால் தவித்து வந்தார். தாயின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவரது மனதில் தினமும் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது. இதையடுத்து தனது தாய்க்கு ஒரு நினைவு இல்லத்தை கட்ட முடிவு செய்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வடிவம் தாஜ்மகால். செலவைப்பற்றி கவலைப்படாமல் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார். இதற்காக திருச்சியில் உள்ள ஒரு கட்டிட வடிவமைப்பாளரிடம் இது குறித்து ஆலோசனை செய்தார். இதன்பின் ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் மற்றும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன் அம்மையப்பன் பகுதியிலேயே ஒரு இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கியது. தற்போது பணிகள் நிறைவடைந்து தாஜ்மகால் வடிவ நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லம் அமைக்க ரூ.5 கோடி செலவாகி உள்ளது. இதன் திறப்பு விழா கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இந்நினைவில்லத்தை அனைத்து மதத்தினரும் பார்வையிடலாம் என்று அம்ருதீன் தெரிவித்துள்ளார். இந்த நினைவு இல்லத்தை பார்வையிட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். தாய்க்காக தாஜ்மஹால் கட்டியுள்ள மகனின் செயல் இப்பகுதியினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post வாழும் காலம் யாவுமே… தாயின் பாதம் சொர்க்கமே…தாய்க்கு தாஜ்மகால் கட்டிய திருவாரூர் ஷாஜகான்: ரூ.5 கோடியில் ராஜஸ்தான் பளிங்கு கற்களால் வடிவமைப்பு appeared first on Dinakaran.