ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி தமிழ்நாட்டில் 5,400 பேரிடம் பல லட்சம் பணம் மோசடி: பட்டதாரிகளுக்கு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார் அறிவுரை

சென்னை: சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து அதன்மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு பகுதி நேர வேலை தருவதாக கூறி கடந்த 5 மாதங்களில் 5,400 பேரிடம் பல லட்சம் பணத்தை மோசடி நபர்கள் பறித்துள்ளதாக மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு சைபர் க்ரைம் தலைமை அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சமீப காலங்களில் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற வலைத்தளங்கள் மூலம் ஆன்லைன் மோசடி வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது புதிய வகையில் மோசடி நடந்து வருகிறது. அதாவது, கூடுதல் பணம் சம்பாதிப்பதற்கான பகுதி நேர வேலைவாய்ப்பு என கூறி ஆன்லைன் மூலமே வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற பெரியல் மோசடிகள் அரங்கேறி வருகிறது.

அதன்படி மோசடி நபர்கள் வாட்ஸ்அப் மூலம் மக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். பகுதி நேர வேலைக்கு ஆர்வமாக உள்ளவர்கள் அந்த வாட்ஸ்அப் செய்தியில் உள்ள லிங்க்கை கிளிக் செய்கிறார்கள். அப்போது அந்த லிங்க் ஒரு டெலிகிராம் குழுவில் சேர்கிறது. டெலிகிராம் குழுவில் சேர்ந்த பிறகு மோசடி நபர்கள், ஓட்டல்களை மதிப்பிடுதல் மற்றும் வீடியோக்களை ‘லைக்’ செய்வது போன்ற சில பணிகளை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அதன்படி மோசடி நபர்கள் 30 பணிகள் அவர்களுக்கு ஒதுக்குகிறார்கள். அதற்காக அவர்களுக்கு ரூ.2,200 அவர்களின் வங்கி கணக்கில் மோசடி நபர்கள் வரவு வைக்கிறார்கள்.

பிறகு தனது கமிஷனை திரும்ப பெற விரும்பும்போது, மோசடி நபர்கள் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்தால் கமிஷன் உள்பட அனைத்து பணமும் மொத்தமாக தங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற கூறி, டெலிகிராம் குழுவில் உள்ள மற்றவர்கள் ‘நாங்கள் சம்பாதித்த பணத்திற்கான வங்கி கணக்கை ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து நமக்கு அனுப்பி நம்ப வைக்கிறார்கள். அதை நம்பி நாம் டெபாசிட் செய்தால் நமது வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் மோசடி நபர்கள் எடுத்து விடுகிறார்கள்.

பிறகு அடுத்த நொடியே உங்களை டெலிகிராம் குழுவில் இருந்து நீக்கிவிட்டு அந்த டெலிகிராம் குழுவை மூடி விடுகின்றனர். அதற்கு பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. இந்த குழுவில் இணைந்த பட்டதாரிகள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணத்தை மோசடி ஆசாமிகளிடம் இழந்துள்ளனர். எனவே ஆன்லைனில் நமக்கு தெரியாத நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, தனி நபர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இதுபோன்ற ஆன்லைன் பணிகளை நம்பி ஏமாற வேண்டாம். அவை அனைத்தும் மோசடிகள்.

பொதுவாக வீடியோவை உருவாக்கி அதை யூடியூப்பில் பதிவேற்றுபவருக்கு மட்டுமே பணம் கிடைக்கும், அதை லைக் செய்பவர்களுக்கு எந்தவித பணமும் கிடைக்காது. எனவே பொதுமக்கள் மற்றும் படித்துவிட்டு வேலை தேடும் பட்டதாரிகள், பகுதி நேர வேலை தேடும் நபர்கள் யாரும் இதுபோன்ற மோசடிகளுக்கு இரையாகிவிடாதீர்கள். இதுபோன்ற ‘பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி’ தொடர்பாக கடந்த 5 மாதங்களில் தமிழ்நாடு சைபர் க்ரைம் பிரிவுக்கு 5,400 புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்களின்படி நாங்கள் மோசடி நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

The post ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி தமிழ்நாட்டில் 5,400 பேரிடம் பல லட்சம் பணம் மோசடி: பட்டதாரிகளுக்கு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: