இறுதி சடங்குக்கு பணம் இல்லாததால் மனைவியின் சடலத்தை வீட்டில் போட்டுவிட்டு கணவர் மாயம்: போலீசார் எச்சரிக்கையால் பொதுமக்கள் உதவியுடன் இன்று அடக்கம்

வேப்பூர்: விருத்தாசலத்தில் உடல்நலக்குறைவால் இறந்த மனைவியின் சடலத்தை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் சடலத்தை வீட்டில் போட்டு விட்டு கணவரும், அவரது தந்தையும் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் எச்சரித்ததையடுத்து பொதுமக்கள் உதவியுடன் இன்று உடல் அடக்கம் நடக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திருவள்ளுவர் நகர் எட்டாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண் சடலம் கிடப்பதாகவும், வீட்டில் யாருமில்லை என்றும் அப்பகுதி மக்கள் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்த பெண் மல்லிகா (40) என்று தெரியவந்தது.

உடல்நலக்குறைவால் இறந்த அவரை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் அவரது கணவர் சபரிராஜன் (45), அவரது தந்தை ராஜேந்திரனுடன் வீட்டைவிட்டு வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து தந்தை, மகன் இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: விருத்தாசலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சபரிராஜன் (45), பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு மாதத்தில் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அடுத்த ஆண்டு முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் அந்தப்பெண் 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் குழந்தைகள் பாட்டி வீட்டுக்கு சென்று விட்டனர். அடுத்து சபரிராஜான் கடந்த ஆண்டு மல்லிகா (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே திருமணமாகி 20 வயதில் ஒரு மகன் இருக்கிறான். மல்லிகாவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்ததால் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானதால் டாக்டர்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச்செல்லுமாறு கூறி விட்டனர்.

இதையடுத்து சபரிராஜன், மல்லிகாவை நேற்று காலை வீட்டுக்கு அழைத்து வந்தார். நேற்று மாலை மல்லிகா திடீரென இறந்து விட்டார். இதனால் கணவர் சபரிராஜன், அவரது தந்தை ராஜேந்திரன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் மல்லிகாவின் சடலத்தை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டனர். போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளியானது. இதையடுத்து உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு சபரிராஜனை போலீசார் எச்சரித்தனர். அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செலவுக்கு பணம் கொடுத்து உதவினர். இன்று உடல் அடக்கம் செய்யப்படும் என ஊர் மக்கள் உறுதி அளித்ததால் போலீசார் அங்கிருந்து சென்றனர்.

The post இறுதி சடங்குக்கு பணம் இல்லாததால் மனைவியின் சடலத்தை வீட்டில் போட்டுவிட்டு கணவர் மாயம்: போலீசார் எச்சரிக்கையால் பொதுமக்கள் உதவியுடன் இன்று அடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: