நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் உற்பத்தி செய்யப்படும் நுண் உரங்களால் அதிக மகசூல் பெறும் விவசாயிகள்: பட்டா, சிட்டா காட்டி இலவசமாக வாங்கிக்கொள்ளலாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் உற்பத்தி செய்யப்படும் நுண் உரங்களால் விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதாக தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பெரிய மல்லனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாசப்பன். விவசாயியான இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். முதல்முறையாக ஒரு ஏக்கர் கரிசல் நிலத்தில் மாநகராட்சி நுண்ணியிர் செயலாக்கம் மையத்திலிருந்து நுண் உரங்களை இலவசமாக வாங்கி நிலத்தை பன்படுத்தி மக்காச்சோள பயிரை மானாவாரி சாகுபடி செய்துள்ளார். வழக்கத்தைவிட ஏக்கர் ஒன்றுக்கு 80 மூடைகள் முதல் 100 மூடைகள் வரை அதிக மகசூல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அருகில் இருந்த மூன்று ஏக்கர் நிலத்திலும் நுண்ணுயிரங்கள் பயன்படுத்தி மானாவாரி சாகுபடி செய்துள்ளார்.

பின்னர் இந்த நுண்ணுயிர் உரத்தையே தென்னை, அகத்தி, வாழை, ரோஜா பூச்செடி, உள்ளிட்டவைகள் பயிர் செய்து நல்ல மகசூல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த அருகில் உள்ள மற்ற விவசாயிகளும் நுண் உரங்களை வாங்கி தங்களது விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயி கூறுகையில், ‘‘மானாவாரியாக மக்காச்சோள பயிர் சாகுபடி எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்தது. சோளக்கருது ஒன்று முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ வரை இருக்கிறது. பின்னர் நடவு செய்யப்பட்ட பூச்செடிகளுக்கு இந்த உரத்தை பயன்படுத்தினேன். வழக்கத்தை விட ரோஜா பூவின் நிறம் நன்கு எடுப்பாக இருந்தது பூவும் அளவில் பெரிதாக காணப்பட்டது. இதனால் சந்தையில் எனது பூவை பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். அனுபவரீதியாக இந்த உரம் விவசாயிகளுக்கு நன்கு பயன்படுகிறது. தற்பொழுது கால்நடை உரங்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளது.

எனவே இதற்கு மாற்றாக நுண் உரங்கள் அரசு இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. என்னைப் போன்ற இயற்கை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்’’என்றார். இது குறித்து மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், ‘‘ திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆர்.எம்.காலனி மெயின் ரோடு, லயன் தெரு, சந்தப்பேட்டை, அண்ணா நகர், பாறைப்பட்டி, வேடப்பட்டி, கோவிந்தாபுரம் மின் மயானம், உள்ளிட்ட பகுதிகளில் 9 நுண்ணுயிர் செயலாக்க மையங்கள் செயல்பட்டு வருகிறது. இன்னும் பத்து நுண்ணுயிர் செயலாக்க மையங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் மாநகராட்சி பகுதிகளிலிருந்து காய்கறி கழிவு, உணவு கழிவு, பழ கழிவுகளை வீடுகள், காந்தி காய்கறி மார்க்கெட் மற்றும் கடைகளில் இருந்து சேகரம் செய்யப்பட்டு நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் நுண் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் தினந்தோறும் 92 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரம் செய்யப்படுகிறது. இதில் 45 டன் மக்கும் கழிவுகள் நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் கொண்டு சென்று உரமாக உற்பத்தி செய்யப்படுகிறது. நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் சேகரிக்கப்பட்ட மக்கும் கழிவுகளை அரைத்து அமைக்கப்பட்டுள்ள தொட்டியலில் நிரப்பி 15 நாள் இடைவெளியில் திறன் மிகு நுண் கரைசல் தெளிக்கப்படுகிறது.

நூறு லிட்டர் குளோரின் ஏற்றம் செய்யப்படாத தண்ணீரில், 5 கிலோ மண்டவெல்லம், மூன்று லிட்டர் தயிர் உள்ளிட்டவைகளை நன்கு கலந்து 20நாட்கள் பேரலில் மூடி வைத்து நொதிக்கச் செய்து திறன் மிகு நுண் கரைசல் தயார் செய்யப்படுகிறது. பின்னர் நொதித்த திரவம் ஒரு லிட்டர் உடன் 5 லிட்டர் தண்ணீர் கலந்து அரைத்த கழிவுகளில் தெளிக்கபடுகிறது. இவ்வாறாக செய்யும்போது நுண்ணுயிர் செயலாக்கம் விரைவாக முடிகிறது. இந்த உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றோம். தனிநபருக்கு கிலோ மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றோம். இதுவரை விவசாயிகளுக்கு 200 டன் நுண் உரங்கள் இலவசமாக வழங்கி உள்ளோம். பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சிறுமலை, ரெட்டியார்சத்திரம், அணைப்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். மேலும் தேவைப்படும் விவசாயிகள் தங்களது நிலத்திற்கான பட்டா, சிட்டா அடங்கல், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு இலவசமாக நுண் உரங்களை வாங்கிக் கொள்ளலாம். தற்பொழுது அரைபத நுண் உரம் மற்றும் சலித்த இறுதிகட்ட நுண் உரம் 80 முதல் 100 டன் நுண் உரங்கள் கையிறுப்பில் உள்ளது. செழிப்பு உரம் ஒரு சில தினங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

The post நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் உற்பத்தி செய்யப்படும் நுண் உரங்களால் அதிக மகசூல் பெறும் விவசாயிகள்: பட்டா, சிட்டா காட்டி இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் appeared first on Dinakaran.

Related Stories: