மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு பயணி 5 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம். ஆனால், 5 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் சுமைகளுக்கு 1 பயணிக்கான பயண கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அதேபோல, 5 கிலோ முதல் 20 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களுக்கு சுமைக்கட்டணமாக ₹10 அல்லது ஒரு பயணிக்கான பயணக் கட்டணம் இதில் எது அதிகமோ அதனை கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
அதேபோல, 20 கிலோவுக்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு ₹20 அல்லது இரண்டு பயணிக்கான பயணக்கட்டணம் இதில் எது அதிகமாக இருக்கிறதோ, அதை சுமை கட்டணமாக வசூலிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பேருந்தில் ஏற்ற நடத்துனர்கள் அனுமதிக்க கூடாது. பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை ஏற்ற அனுமதிக்க கூடாது.
இதேபோல, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் அதிக பயணிகள் பயணிக்கும் நேரங்களில் சுமைகளை பேருந்தில் ஏற்றக்கூடாது. சக பயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்க கூடாது. அதேபோல, பயணிகள் இல்லாத சுமைகளை மாநகர பேருந்துகளில் ஏற்ற அனுமதிக்க கூடாது. செய்தித்தாள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல முன் அனுமதி பெற வேண்டும். அந்த சுமைகளை நியமிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் ஏற்றவும், இறக்கவும் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
அதன்படி, சுமைகள் மற்றும் கட்டணங்கள் குறித்த விளக்கத்தினை நடத்துனர்கள், போக்குவரத்து மேலாளர்கள், ஆய்வாளர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் நேரக்காப்பாளர்கள் அறிக்கையில் தெரிவித்து இருப்பதன்படி, அனைவருக்கும் விளக்கி கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து கிளை மேலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
The post தடை செய்யப்பட்ட பொருட்களை பேருந்தில் அனுமதிக்க கூடாது: நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு appeared first on Dinakaran.