கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு: தாமிரபரணி படித்துறையில் மெகா தூய்மை பணி

 

வீரவநல்லூர், மே 1: சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோயில் படித்துறையில் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மெகா தூய்மைப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் தாமிரபரணி ஆற்றில் பரிகாரம் என்ற பெயரில் பக்தர்களால் விட்டுச்செல்லப்பட்டு கிடந்த 4 டன் பழைய துணிகளை அகற்றினர்.சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் பக்தவச்சலப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பித்ருதோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

பிரசித்திபெற்ற இக்கோயில் படித்துறை பகுதிகளில் பரிகாரங்கள் என்ற பெயரில் பழைய துணிகளை வெளியூர்வாசிகள் விட்டுச்செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனின் கவனத்திற்கு சென்றதை அடுத்து அவரது ஏற்பாட்டில் நெல்லை நீர்வளம் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள், சேரன்மகாதேவி பேரூராட்சி தூய்மைப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் படித்துறையில் மெகா தூய்மைப்பணி நேற்று நடந்தது. தலைமை வகித்த நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், தூய்மைப்பணியை துவக்கிவைத்துப் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் கார்த்திகேயன் நட்டினார்.

இந்த மெகா தூய்மைப்பணியின் போது கோயில் படித்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் பரிகாரம் என்ற பெயரில் பக்தர்களால் விட்டுச்செல்லப்பட்டு கிடந்த 4 டன் பழையத்துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தன்னார்வலர்கள் முற்றிலும் சேகரித்து அகற்றினர். இதில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், சேரன்மகாதேவி தாசில்தார் விஜயா, மண்டல துணை தாசில்தார் சீதாதேவி, நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பெருமாள், பேரூராட்சி செயல் அலுவலர் காதர், ஆர்ஐ ராஜ்குமார், விஏஓக்கள் இதயக்கனி, பாலமுருகன், கோயில் செயல் அலுவலர் இளங்குமரன் மற்றும் வருவாயத்துறையினர், பேரூராட்சி பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்
பங்கேற்றனர்.

The post கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு: தாமிரபரணி படித்துறையில் மெகா தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: