(தி.மலை-காரிடர்) ₹2 கோடிக்கு நெல் விற்பனை விவசாயிகள்- வியாபாரிகள் மகிழ்ச்சி செங்கத்தில் அதிகளவில் விளைச்சல்

செங்கம், ஜன.11: செங்கம் பகுதியில் நெல் சாகுபடி அதிகரித்ததால் வெளிமாநில வியாபாரிகள் போட்டி போட்டு நெல் மூட்டைகளை வாங்கிச் செல்கின்றனர். அதனால், விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். குறிப்பாக நெல் சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் பெற்று வருகின்றனர். பல ஆண்டுகளாக போதிய பருவமழை இன்றி ஏரி, குளம், குட்டை, கிணறு உள்ளிட்டவை வறண்டு காணப்பட்டது. கடந்த பல ஆண்டு காலமாக விவசாய நிலங்கள் காய்ந்து கிடந்தன. இந்த ஆண்டு பருவ மழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கண்மாய், கிணறு என நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. அதனால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களின் விளை நிலங்களில் அதிக அளவில் நெல் பயிரிட்டனர். தற்போது, நல்ல மகசூல் அடைந்த நிலையில் அறுவடை செய்து செங்கம் நகரில் மார்க்கெட் மற்றும் அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். செங்கம் பகுதியில் தினசரி மார்க்கெட்டில் வெளிமாநில வியாபாரிகள் குவிந்து ₹1 கோடி முதல் 2 கோடி வரை வியாபாரம் செய்து நெல் மூட்டைகளை வாங்கி செல்கின்றனர். அதனால் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள், மற்றும் மண்டி உரிமையாளர்கள் என பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உள்ளூர் வியாபாரிகள், வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாநில வியாபாரிகளும் போட்டுக்கொண்டு வியாபாரம் செய்வதால் நெல் விற்பனை சூடுபிடித்துள்ளது.

Related Stories: