வந்தவாசி, மார்ச் 17: வந்தவாசியில் ஆவணங்கள் இன்றி ஆடு வியாபாரி மற்றும் நாடக கலைஞரிடம் மொத்தம் ரூ.4.58 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நேற்றுமுன்தினம் மாலை அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்தது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியிலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும்படை அலுவலர் விஜய் தலைமையில் ஏட்டு ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் நேற்று அதிகாலை வந்தவாசி- சேத்துப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வல்லம் கிராமத்தில் இருந்து போளூர் நோக்கி பைக்கில் சென்றவரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அவரிடம் இருந்து ரூ.73 ஆயிரத்து 30 இருந்தது. விசாரணையில், வல்லம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார், ஆடு வியாபாரி என்பதும், போளூரில் நேற்று நடந்த சந்தையில் ஆடுகள் வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தவாசி தாசில்தார் ஜெயபாலிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் தமிழரசன் தலைமையிலான படையினர் நேற்று ஆரணி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆரணியில் இருந்து இருந்து வந்தவாசி நோக்கி வந்த பைக்கை சோதனை செய்தனர். அப்போது ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாடக கலைஞரான ஆனந்தன் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.3.85 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்து வந்தவாசி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயவேலிடம் ஒப்படைத்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் சென்னையில் உள்ள தனது மகளுக்காக வந்தவாசி பகுதியில் வீட்டுமனை வாங்கி உள்ளதாகவும், அதனை பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு காசோலை எடுப்பதற்காக வங்கிக்கு செல்லும் போது பணம் பறிமுதல் செய்யப்பட்டது தெரியவந்தது. உரிய ஆவணம் செலுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளும்படி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தனுக்கு ஆலோசனை வழங்கினார்.
