வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு திருவண்ணாமலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு

திருவண்ணாமலை, மார்ச் 21: திருவண்ணாமலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். முன்னதாக வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி தேதி நடக்கிறது. அதற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு 100% ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் தர்ப்பகராஜ் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026 நடைபெவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேருந்துகளில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பயணிகளிடம் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சி சமுத்திரம் பகுதியிலுள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர்,மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)தனபதி, திருவண்ணாமலை வருவாய் கேட்டாட்சியர் செல்வம், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருவண்ணாமலை வடிவேலன், திருவண்ணாமலை வட்டாட்சியர் மோகன்ராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: