பேரூராட்சி அதிமுக கவுன்சிலருக்கு ஆயுள் தண்டனை திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு தொழிலாளியை அடித்து கொலை செய்த வழக்கில்

திருவண்ணாமலை, மார்ச் 25: திருவண்ணாமலை அருகே கூலித் தொழிலாளியை அடித்து கொலை செய்த அதிமுக கவுன்சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சி 11வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜான் விக்டர் (42). இவரது புதிய வீடு கட்டுமான பணியின்போது, அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பால்ராஜ் என்பவர் வீட்டு வயரிங் வேலை செய்தார். ஆனால், அவருக்கான கூலியை வழங்காமல் ஜான் விக்டர் அலைகழித்ததாக கூறப்படுகிறது. பலமுறை கூலித் தொகையை கேட்டும், கொடுக்காமல், மிரட்டல் விடுத்துள்ளார்.

எனவே, எலக்ட்ரீசியன் பால்ராஜ் மற்றும் அவரது தம்பி மார்ட்டின் சார்லஸ் ஆகியோர் கடந்த 31.3.2013 அன்று ஜான் விக்டர் வீட்டுக்கு சென்று வயரிங் செய்த கூலித் தொகையை கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர் ஜான்விக்டர், எலக்ட்ரீசியன் பால்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி மார்ட்டின் சார்லஸ் அதை தடுத்துள்ளார். அப்போது, மார்ட்டின் சார்லஸ் மீதும் சரமாரி தாக்குதல் நடந்துள்ளது. மேலும், நிலை குலைந்து கீழே விழுந்தவர் மீது மீண்டும் விறகு கட்டையால் தாக்கியுள்ளார்.

அதில், கூலி தொழிலாளி மார்ட்டின் சார்லஸ் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இது தொடர்பாக, வேட்டவலம் போலீசில் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், ஜான் விக்டர் மற்றும் அவரது தாய் மேரி ஸ்டெல்லா, தங்கை விமலா ஆகியோரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

அதில், கூலித்தொகையை கேட்டதால் ஆத்திரமடைந்து தொழிலாளியை அடித்து கொலை செய்த அதிமுக கவுன்சிலர் ஜான் விக்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேரி ஸ்டெல்லாவுக்கு ரூ.500 மற்றும் விமலாவுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜான் விக்டர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் விக்டர் தற்போது வேட்டவலம் பேரூராட்சியின் 11 வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: