ஆந்திர மாநில வியாபாரியிடம் ரூ.5.42 லட்சம் பறிமுதல் பட்டு சேலைகள், 2 காசோலைகள் பறிமுதல் ஆரணி அருகே காரில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற

ஆரணி, மார்ச் 18: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஆரணி சட்டன்ற தொகுதியில் உள்ள 323 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு, பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 18 குழுக்கள் அமைத்து, சுழற்சி முறையில் 24 மணி நேர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆரணி- செய்யாறு செல்லும் சாலை மாமண்டூர் கிராமத்தில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரசாந்த், தலைமை காவலர் ஆனந்தி, முதல்நிலை காவலர் ராஜிவ்காந்தி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, செய்யாறில் இருந்து ஆரணி நோக்கி அதிவேகமாக காரில் வந்த 2 பேரை பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பரிசோதனை செய்ததில், 200 பட்டு சேலைகள், 2 காசோலைகள், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.5.42 லட்சம் ரொக்கம் பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், துர்க்கி மண்டலம் தர்மாவரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு (48), பட்டு சேலை வியாபாரி. இவர், அதேபகுதியை சேர்ந்த கார் டிரைவர் மருதி என்பரை அழைத்து கொண்டுநேற்று ஆந்திராவில் இருந்து காரில் பட்டு எடுத்து கொண்டு, காஞ்சிபுரத்தில் விற்பனை செய்துள்ளார்.

பின்னர், மீதமுள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு, மீண்டும் காஞ்சி புரத்தில் இருந்து செய்யாறு, ஆரணி வழியாக ஆந்திரா சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரசாந்த் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.5.42 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, ஆரணி தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் குமரேசன், சமுக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் லலிதா, துணை வட்டாட்சியர் விஜயா ஆகியோரிடம் வழங்கினார். தொடர்ந்து, அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ சிவாவிடம் பணத்தை ஒப்படைத்தனர். பின்னர், அந்த பணத்தை கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: