ஹாட் பாக்ஸ்களை வீசிவிட்டு கரும்பு தோட்டத்தில் பதுங்கிய அதிமுகவினர் வீடு, வீடாக வழங்கியபோது சிக்கினர் கீழ்பென்னாத்தூர் அடுத்த திடீர்குப்பம் பகுதியில்

கீழ்பென்னாத்தூர், மார்ச் 25: கீழ்பென்னாத்தூர் அடுத்த திடீர்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று அதிமுகவினர் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ்களை வினியோகம் செய்தபோது தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கினர். உடனே ஹாட் பாக்ஸ்களை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம்பிடித்த அதிமுகவினர் கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டுக்குளம்- வேடநத்தம் சாலையில் உள்ள திடீர்குப்பம் கிராம பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தலைமை காவலர் வி.சரளா, முதல் நிலைக் காவலர் பெருமாள் மற்றும் வேளாண்மை அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திடீர் குப்பம் பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று ஹாட் பாக்ஸ் வழங்கி வருவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் திடீர் குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு அதிமுகவை சேர்ந்த சிலர் ஹாட் பாக்ஸ்களை வீடு வீடாக வழங்கிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் 12 ஹாட் பாக்ஸ்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அருகில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் பதுங்கினர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அதிமுக நிர்வாகிகளை சேர்ந்த சிலர் ஹாட் பாக்ஸ்களை வீடு வீடாக சென்று மக்களுக்கு வழங்கியது தெரியவந்தது.
உடனே பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட 12 ஹாட் பாக்ஸ்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: