(தி.மலை) ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதா? குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்

திருவண்ணாமலை,டிச.8: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தரமான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக வழங்கப்படுவது ஏன்? என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமடைந்தனர். திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அனைவருக்கும் உரிய நிவாரணம் பாகுபாடு இன்றி வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தில் பல லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். அனைவருக்கும் உரிய காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து தரமான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிச தரமற்றதாகவும், சுகாதரமற்றதாகவும் உள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் எங்கே செல்கிறது. கடினமாக பாடுபட்டு தரமான நெல் வழங்கினால், விவசாயிகளுக்கு இப்படி தரமற்ற அரிசி வழங்குவதா? என விவசாயிகள் ஆவேசமடைந்தனர்.

கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: