போக்சோ வழக்கில் சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரம் ஜாமீனில் வந்ததும் வீடுபுகுந்து 6 பேரை வெட்டிக் கொன்ற சைக்கோ வாலிபர்: சிறுமியும் பலாத்காரம் செய்து கொலை; மனைவி, 2 குழந்தைகளும் வெட்டிசாய்ப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் தெய்வலகுடா பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவரது மனைவி சரிதா. இவர்களது மகன்கள் பரிஷத் (4), தைவித்ஷிக். இந்நிலையில் அதேபகுதியில் ஷபாத் என்ற இடத்தில் அருகே பிஆர்ஆர் ஸ்டேடியம் பகுதியில் வசித்து வந்த லட்சுமி என்ற பெண்ணையும், அவரது 17 வயது மகளையும் ராஜ்குமார் அவ்வப்போது பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த மே மாதம் அவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர். 17 வயது சிறுமிக்கும், அவரது தாய்க்கும் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ராஜ்குமாரின் மனைவி குரல் கொடுத்தார். தனது கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் கடும் ஆவேசமடைந்தார். தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த தாய், மகள் மீதும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மனைவி ஆகியோரையும் பழிவாங்க ‘சைக்கோ’ போன்று திட்டமிட்டார்.

இந்நிலையில் அண்மையில் ஜாமீனில் ராஜ்குமார் வெளியே வந்தார். இதனால் தன் மீது புகார் கொடுத்தவர்கள் மற்றும் தனது மனைவி உள்ளிட்ட அனைவரையும் ஒட்டுமொத்தமாக கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற அவர், லட்சுமியின் வீட்டின் கதவை தட்டினார். நடக்கப்போகும் விபரீதம் அறியாத லட்சுமி கதவை திறந்தார். அப்போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறியில் நின்றிருந்த ராஜ்குமார், வீட்டுக்குள் ஆவேசமாக நுழைந்தார். பின்னர் அரிவாளால் லட்சுமியை சரமாரியாக வெட்டினார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த லட்சுமியின் தாய் ருக்கம்மா (65) அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அப்போது அறையில் இருந்து வெளியே வந்த 17 வயது சிறுமி நடந்த சம்பவம் பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் ராஜ்குமார், சிறுமியின் வாயை பொத்தி தரதரவென இழுத்துச்சென்று காரில் ஏற்றிக்கொண்டு அங்குள்ள முட்புதரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவரையும் அரிவாளால் வெட்டி ஏரிக்கரையில் வீசினார்.

தொடர்ந்து ஆத்திரம் அடங்காத அவர், அதே கொலை வெறியுடன் நள்ளிரவு தனது வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். அங்கு கதவை திறந்த தனது மனைவி சரிதா மற்றும் ஒன்றுமே அறியாமல் தூங்கிக்கொண்டிருந்த தனது 2 குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி அரிவாளால் வெட்டி சாய்த்தார். மொத்தம் 6 பேரை வெட்டி சாய்த்த நிலையில் அங்கிருந்தபடி தனது பெற்றோருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினார்.

மேலும் தானும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமாரின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து இருவேறு இடங்களில் இருந்த 6 பேரின் சடலங்களை மீட் னர். மேலும் தலைமறைவான ராஜ்குமாரை தேடிவருகின்றனர்.

* மனநலம் பாதித்த பெண் தப்பினார்
6 பேரை கொடூரமாக கொன்ற ராஜ்குமார் தன் மீது புகார் அளித்த சிறுமியின் வீட்டுக்கு சென்று 3 பேரை கொன்ற நிலையில் அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணை கொலை செய்யாமல் விட்டு சென்றிருப்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் மீது மட்டும் இரக்கப்பட்டு விட்டுச்சென்றிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

Related Stories: