அதிநவீன போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர் கப்பலை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது:  நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் மகேந்திரகிரி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புத் திறனை மேலும் மேம்படுத்துவதற்காக, அதிநவீன தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். ஐந்தாம் தலைமுறை விமானம் தாங்கி கப்பல் தொழில்நுட்பத்துடன், நீருக்கடியில் இயங்கும் டார்பிடோ அமைப்புகளையும் உருவாக்கி வருகிறோம். கர்னூலை நாட்டின் முன்னணி டிரோன் மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய ஆயுதப்படைகள், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட கப்பல் தொழில்நுட்பம், டிரோன் தொழில்நுட்பம் மற்றும் முழுமையான கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவற்றை கொண்டு நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய தொழில்நுட்பம், போர் தேவைகளுக்கு மட்டுமல்லாமல், பேரிடர்களின்போது மற்ற நாடுகளுக்கு உதவுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவின் நோக்கம் போர் அல்ல, உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையே நமது கொள்கை. ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு போர் அல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாடு எவ்வாறு பதிலளிக்கும் என்பதை உலகிற்கு காட்டும் ஒரு நடவடிக்கை.

இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டாண்மையை நாங்கள் மேலும் வலுப்படுத்தி வருகிறோம். தேவைப்படும் நேரத்தில் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம். கடல்சார் தொலைநோக்குத் திட்டம் 2030ஐ செயல்படுத்தும் ஒரு பகுதியாக, கடல்சார் துறையின் வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு கடல்சார் மேம்பாட்டு நிதி அமைக்கப்பட்டுள்ளது.

கப்பல் கட்டும் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் (ஸ்டார்ட் அப்ஸ்) அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த கடல்சார் சூழலமைப்பை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: