திருவனந்தபுரம்:சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசனில் தந்திரி பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி கண்டரர் ராஜீவரர் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து முக்கிய பூஜைகளும் தந்திரியின் பொறுப்பில் இருப்பவரின் தலைமையில் தான் நடைபெறும். செங்கணூர் தாழமண் குடும்பத்தை சேர்ந்த நேரடி ஆண் வாரிசுகள் தான் சபரிமலை தந்திரி பொறுப்பை ஏற்று சபரிமலையில் முக்கிய பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்தக் குடும்பத்தை சேர்ந்த ஆண் வாரிசுகளான மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர் மற்றும் முன்னாள் தந்திரி கண்டரர் மோகனரின் மகன் மகேஷ் மோகனர் ஆகியோர் தந்திரி பொறுப்பில் உள்ளார்கள். இவர்களில் ஒவ்வொருவரும் மாறி மாறி 2 வருடம் சபரிமலையில் பூஜைகளை நடத்துவார்கள். தற்போது சபரிமலையில் தந்திரியாக உள்ள மகேஷ் மோகனரின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது.
இதன்பின் நவம்பர் மாதம் தொடங்கும் மண்டல காலம் முதல் அடுத்த 2 வருடத்திற்கு மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர் பொறுப்பை ஏற்கவேண்டும். இந்நிலையில் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் தந்திரி பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று கூறி கண்டரர் ராஜீவரர் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தனக்குப் பதிலாக தன்னுடைய மகன் பிரம்மதத்தனை தந்திரியாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துவிட்டு இது தொடர்பாக முடிவை தெரிவிப்பதாக தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் தந்திரிக்கு பதில் அளித்துள்ளார். சபரிமலையில் தங்கத் தகடுகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக தந்திரி கண்டரர் ராஜீவரரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
