இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மைசூருவில் காலமானார்.
எஸ். ஜானகி 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்ட இவர் இசையின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டார். 1957இல் ‘விதியின் விளையாட்டு’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கினார்.
‘தென்னிந்தியாவின் கானக்குயில்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதை 4 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடி முத்திரை பதித்தவர்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
