சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, முன்னாள் எம்பி பா.குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்து வருகிறார்கள்.
இதில் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 6 அதிமுக எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தவெக சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் நிர்வாகிகள் ராஜினாமா செய்வது ஏன்? என்பது குறித்து கடந்த ஒரு வாரமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக அனைத்து நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி, நேற்று திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, முன்னாள் அதிமுக எம்பி பா.குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை. இவர்கள் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. அதேநேரம், அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். லீமா ரோஸ் கூறும்போது, ‘நான் அதிமுகவில் இருந்து வெளியேற மாட்டேன். தொடர்ந்து அதிமுகவிலேயே நீடிப்பேன்’ என்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘கட்சியை விட்டு வெளியேறி மாற்று கட்சியில் இணைந்தவர்களை பற்றி பேசி நேரத்தை வீணாக்காமல், வருகிற உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும். தகுதியான நபர்களை தேர்தலில் போட்டியிட வைக்க தலைமைக்கு பரிந்துரைக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும். அதேபோன்று இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை தோற்கடிக்க முனைப்புடன் களப்பணி ஆற்றுங்கள்,’ என்றார்.
