ராமநாதபுரம்: கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றவர்கள் மீதே போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆயிஷா பீவி (45). இவர் கடந்த 6ம் தேதி தனது தம்பி ஜலீல் ரகுமான் (40), 17 வயது மகன் மற்றும் தம்பியின் 11 வயது மகள் ஆகிய 4 பேருடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
அப்போது, ‘‘எங்கள் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபார கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியது. திருப்பாலைக்குடி போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் எதிர் தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தும் கைது செய்யவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரி பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி முடிந்து கேணிக்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இந்நிலையில், இரண்டு சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி ஜலீல் ரகுமான், ஆயிஷா பீவி மீது கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியவர்கள் மீதே போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
