மதுரை: கரூர் நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறையை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்தாண்டு செப். 27ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட அரசியல் பொதுக்கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப் பணி வழங்கப்பட உள்ளதாகவும், ஜூலை 10ல் கரூர் மாவட்டத்திற்குச் செல்லவிருக்கும் அரசுத் தரப்பு மூலம், இதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கும்பகோணம் விபத்து முதல் கள்ளச்சாராய மரணங்கள், தீ விபத்துகள், சாலை விபத்துகள் வரை தமிழ்நாட்டில் இதற்கு முன் பல பேரிடர்கள் நடந்துள்ளன. அந்தப் பாதிப்புகளுக்கு அரசு நிதி உதவியும் நிவாரணமும் வழங்கியுள்ளதே தவிர, நிரந்தர அரசு வேலை வழங்கியதில்லை. விபத்துகளுக்கு அரசு வேலை வழங்குவதில் எந்தவொரு பொதுவான, சீரான கொள்கையும் இதுவரை இல்லை. இப்படி முறையான கொள்கை இல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் அவசர அவசரமாக நிரந்தர அரசு வேலை வழங்குவது தேவையற்ற சட்ட சிக்கல்களை உருவாக்கும்.
உச்ச நீதிமன்றத்தில் இறுதி நிலையை எட்டும் வரை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கவோ அல்லது அதனை நடைமுறைப்படுத்தவோ அரசுக்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தீரன் திருமுருகன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ‘‘கரூர் சம்பவம் தொடர்பான எங்களது மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றனர். இதற்கு நீதிபதிகள், ‘‘இதில் நாங்கள் தலையிட முடியாது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருந்தாலும் மனுவாக முறையாக தாக்கல் செய்தால் பட்டியல் இடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்றனர்.
