தேனி: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தேனி தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கறிஞர்கள் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஐகோர்ட் மதுரை கிளையை சேர்ந்த வித்யாதரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நேற்று தேனி கலெக்டர் வைத்திநாதன் மற்றும் போலீஸ் எஸ்பி பிரவீன் கவுதம் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
புகார் மனு குறித்து வழக்கறிஞர் வித்யாதரன் கூறுகையில், ‘‘தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பண முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க ரூ.30 லட்சம் முறைகேடு நடந்திருப்பதாக, தவெக கட்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க பரிந்துரைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தகுதியை முன்னிறுத்தி நியமனம் நடைபெற வேண்டும். இதற்கான தேர்வினை சரியாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம். தவெக அரசு, மாவட்டச் செயலாளர்கள் மூலம் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு பரிந்துரைத்துள்ள வழக்கறிஞர்களை நியமிக்க கூடாது. வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
