அமைச்சரவையிலும் பங்கு… திமுகவுடனும் நட்பு…. நோபல் பரிசே கொடுக்கலாம் திருமாவை கலாய்த்த வைகோ: காங்கிரசை தொடர்ந்து மதிமுகவும் விமர்சனத்தால் கூட்டணியில் சலசலப்பு

கோவில்பட்டி: தவெக அமைச்சரவையிலும் அங்கம் வகித்து, திமுகவுடனான நட்பும் தொடர்கிறது என்று திருமாவளவன் கூறியதற்கு, அவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என்று வைகோ கிண்டலடித்து உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழாவில் கடந்த 6ம் தேதி பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘‘திமுக கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுகவே அறிவித்துவிட்டது. ஆனால், விசிக இன்னும் அறிவிக்கவில்லை.

தவெக கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம்பெறும்’’ என்று தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், ‘‘அமைச்சரவையில் சேர்ந்த உடனே தவெக கூட்டணியில் சேர்ந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. திமுகவுடனான நட்பு, உறவு தொடர்கிறது’’ என கூறியிருந்தார். இதற்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ‘‘தவெக தோழமை கட்சி கூட்டத்தில் தவெக தலைமையில் கூட்டணி அமையவில்லை என திருமாவளவன் பேசி உள்ளார்.

அமைச்சரவையில் இடம்பெற்றாலே அதில் நீங்களும் ஒரு அங்கம்தான். எனவே வார்த்தை விளையாட்டு வேண்டாம். லெப்ட் டர்ன் எடுத்து பின்பு ரைட் சர்ன் பற்றி பேசுவது வெட்டி வேலை’’ என்று கடுமையாக தாக்கினார். இந்நிலையில், கோவில்பட்டியில் நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களை சந்தித்தார். அப்போது, தவெக ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும் மு.க.ஸ்டாலினுடன் கருத்து பரிமாற்றம் தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, ‘அது நோபல் பரிசு கொடுக்க வேண்டிய கருத்து அவ்வளவுதான்’ என்றார்.

அமைச்சர் கீரத்தனா பள்ளி ஆய்வு சர்ச்சை குறித்து கேட்டதற்கு, ‘‘என்ன நடந்தது என்ற முழு விவரம் தெரியாமல் அதை பற்றி நான் கருத்து கூற முடியாது’’ என்றார். கூட்டணி விவகாரத்தில் திருமாவளவனை மாணிக்கம் தாகூர் ஏற்கனவே கடுமையாக தாக்கி பேசி உள்ள நிலையில், தற்போது வைகோவும் கிண்டிலடித்து உள்ளது தவெக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

* திமுக, தவெக இந்தியா கூட்டணியில் சேர வேண்டும்; நோபல் பரிசு கிடைச்சா வைகோவுக்கு நன்றி சொல்றேன்: திருமாவளவன் பதிலடி
விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அரியலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எங்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை திமுகவில் இணைத்து கொண்டார்கள் என்பதற்காக நாங்கள் திமுகவை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டையோ அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியையோ மட்டும் மனதில்கொண்டு நான் பேசவில்லை. என்னுடைய பார்வை முழுவதும் தேசிய அளவிலானதாகும். தேசிய அளவில் பாஜவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும். அந்த அணியில் (இந்தியா கூட்டணி) திமுகவும் இருக்க வேண்டும், தவெகவும் இருக்க வேண்டும்.

கொள்கை எதிரிகள் ஒன்றிணைய வேண்டும். திருமாவளவன் என்ன குழப்புகிறார், அவருக்கு என்ன ஆச்சு? என்று கேட்பார்கள். ஆனால், அது அவர்களின் புரிதலில் உள்ள சிக்கலே தவிர, என் பார்வையில் உள்ள சிக்கல் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். இந்தியா கூட்டணியில் சேர திமுகவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, அது பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார். உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று வைகோ கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ‘‘அவருடைய பரிந்துரைக்கு எனது நன்றிகள். நோபல் பரிசு கிடைத்தால் கண்டிப்பாக அவருக்கு நன்றி சொல்வேன்’’ என்றார்.

Related Stories: