நாகர்கோவில்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தின் பெயரில் முக்கிய மாற்றத்தைச் செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ‘மகளிர் விடியல் பயணம்’ என்றிருந்த பெயர் விடியல் நீக்கப்பட்டு தற்போது ‘மகளிர் பயணம்’ எனச் சுருக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரச் சுமையின்றி பயணம் செய்யும் வகையில் இலவசப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கு ‘மகளிர் விடியல் பயணம்’ என்று பெயரிடப்பட்டு, பேருந்துகளின் முகப்பு மற்றும் பின்புறக் கண்ணாடிகளில் டிஸ்பிளே போர்டுகளில் அவ்வாறே காட்சிப்படுத்தப்பட்டது. பணிக்குச் செல்லும் பெண்கள், சிறு தொழில் புரியும் மகளிர் மற்றும் கல்லூரி மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், புதிய அரசின் கீழும் எவ்வித தடையுமின்றித் தொடர்கிறது. தற்போது தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் ‘விடியல்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, சுருக்கமாக ‘மகளிர் பயணம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மண்டலப் பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
குமரி மாவட்டத்தில் செல்லும் நகரப் பேருந்துகள் வரை அனைத்திலும் பழைய ‘மகளிர் விடியல் பயணம்’ பதிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. அதற்குப் பதிலாக, ‘மகளிர் பயணம்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அனைத்துப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்களுக்கும் தலைமை அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
