ஊழல பத்தி நீங்க பேசாதீங்க அசிங்கப்பட்டு போவீங்க..! நயினார் மீது மாணிக்கம் தாகூர் சாடல்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்தை நயினார் நாகேந்திரன் கிண்டலடித்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட, ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம், அணை கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம், என்று நான் கூறியதை, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேலியும், கிண்டலுமாக விமர்சித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் குற்றுயிரும், குலையுயிருமாக இருந்த பாஜ, கடந்த மே மாதம் 4ம்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இருந்த இடம் தெரியாத அளவுக்கு காணாமல் போய் விட்டது. தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட பாஜவின் மாநில தலைவராக இருந்து கொண்டு, கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்தை நயினார் நாகேந்திரன் கிண்டலடித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

கர்நாடகத்தில் பாஜ ஆட்சி நடந்த போது முதல்வராக இருந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மை போன்றவர்கள், மேகதாது அணையை கட்டியே தீருவோம். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மாட்டோம், என்று முழங்கியதை எல்லாம் நயினார் நாகேந்திரன் மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். நதிநீர் விவகாரம் உள்பட இரு மாநிலங்களுக்கு இடையிலான எந்த பிரச்னையையும், சுமூகமாக தீர்க்க வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பு. பிரதமரின் கடமை. ஆனால், அந்த கடமையை செய்யாமல் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய பாஜ அரசு நடத்தி வருகிறது.

அதனால் தான் தமிழ்நாட்டு மக்கள் பாஜவை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, பிரச்னைக்கு சுமூக தீர்வு காணாமல், இரு மாநிலங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நாடகத்தை மோடி அரசு அரங்கேற்றி வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு.

மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக காங்கிரஸ் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறது. அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தவெக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை நயினார் நாகேந்திரன் சுமத்தியிருக்கிறார். ஊழல் பற்றி பேசும் போதெல்லாம் பாஜ தலைவர்கள் தங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் அசிங்கப்பட்டு போவீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

Related Stories: