மதுபான ஆலைகளின் விலை உயர்வு கோரிக்கையை ஏற்றதால் கட்சி நிதியாக தவெகவுக்கு ரூ.800 கோடி அளித்ததாக வரும் செய்தி உண்மையா? இதுதான் தூய்மையான நிர்வாகமா? மாஜி அமைச்சர் உதயகுமார் கேள்வி

மதுரை: மது ஆலைகள் சுமார் ரூ.800 கோடி வரை தவெக கட்சியின் வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளதாக வெளிவருகின்ற செய்திகள் உண்மையா என, அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தை தருவேன் என சினிமா வசீகர வசனம் பேசிய விஜய், இன்றைக்கு எப்படிப்பட்ட துய நிர்வாகத்தை தந்து வருகிறார் என ஆயிரமாயிரம் கேள்விகள் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

ஆட்சி அமைந்ததும் 716 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதோடு, மதுபான விலையை உயர்த்தும் மது உற்பத்தியாளர்களின் கோரிக்கையையும் சத்தமின்றி ஏற்ற தவெக அரசு, ஒரு மதுபான தொழிற்சாலைக்கு இத்தனை கோடியென வகைப்படுத்தி லஞ்சம் கை மாறி இருப்பதாக செய்திகள் வருகிறது. ஒரு தொழிற்சாலைக்கு இவ்வளவென நிர்ணயித்து சுமார் ரூ.800 கோடி வரை தவெக கட்சியின் வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக வெளிவருகின்ற செய்திகள் உண்மையான செய்தியா? விஜய்யின் தூய்மையான நிர்வாகம் என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சம் வரை பேரம் பேசியதன் மூலம் ரூ.120 கோடி வசூல் வேட்டை நடந்துள்ளது. இதை நாம் சொல்லவில்லை. தவெக கட்சியின் பெண் வழக்கறிஞரே தனக்கு நீதி கேட்டு உயர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார். இதையும் விஜய்யின் தூய்மையான நிர்வாகம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

மாநிலம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்து அலுவலகங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூ.57.98 லட்சத்தை கைப்பற்றி, அரசு அதிகாரிகள், தனியார் என 64 பேர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர். இந்த லஞ்சப்பணம் தவெகவின் எந்த பவர் சென்டருக்கு செல்கிறது? கல் குவாரிகளில் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டதாக செய்திகள் வெளிவந்தது. கனிம வளம் கடத்தலுக்கு கமிஷன் வாங்கப்படுகிறதா? கனிம வளம் கொள்ளை போவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கையை தவெக அரசு எடுத்திருக்கிறது?

தமிழ்நாட்டில் மின்சாரம், சட்டம் ஒழுங்கு, காவிரியில் தண்ணீர், பெண்கள் பாதுகாப்பு, இப்போது தேர்தலிலே கொடுத்த வாக்குறுதிகள் என எல்லாமும் காணாமல் போய்விட்டது. மொத்தத்தில் விஜய்யின் 55 நாட்கள் தவெக ஆட்சியில் காணாமல் போன மக்கள் உரிமைகளை கண்டுபிடிக்கவே நேரம் இல்லாத போது, ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்திட எங்கே முதல்வருக்கு நேரம் இருக்கப் போகிறது? மாற்றம் தந்த மக்கள் எப்போது மாற்றம் வரும் என இலவு காத்த கிளியாக கவலையோடு காத்திருக்கிறார்கள். இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: