கிளாண்டர்ஸ் தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு: கால்நடை பராமரிப்பு துறை உத்தரவு

 

சென்னை: கிளாண்டர்ஸ் தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குதிரைகள், கழுதைகள் மற்றும் கோவேறு கழுதைகளை தாக்கும் இந்த கிளாண்டர்ஸ் நோய், பர்கோல்டெரியா மலேய் என்ற பாக்டீரியாவால் பரவுகிறது. இந்த தொற்று விலங்குகளுக்கு இடையே மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் உடலில் கழலைக் கட்டிகள் உருவாகும் காரணத்தால் இதற்கு ‘கிளாண்டர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்ட விலங்குகளின் புண்களில் இருந்து வெளியேறும் திரவம் தோலில் படுதல், கண்ணீர், சளி, உமிழ்நீர் போன்றவற்றின் மூலம் தொற்று பரவ வாய்ப்புள்ளது. குதிரைகள் இருமும் போது அல்லது கணைக்கும் போது வெளியேறும் நீர்த்திவலைகளை சுவாசிப்பதன் மூலமும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். இதன் காரணமாக சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

உடல்நலக்குறைவு உள்ள குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்தக்கூடாது. குதிரைகளுக்கு காய்ச்சல், இருமல், மூக்கில் சளி வடிதல், தோல் புண்கள், சுவாசக்குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்.மேலும், குதிரைகளின் சவாரிகளை தவிர்க்கவும், குதிரைகள் வைக்கப்படும் இடங்கள் மற்றும் பயன்படுத்தப்படும் உபகரணங்களை முறையாக சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கவும் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல கடற்கரை பகுதிகள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா மையங்களில் குதிரை சவாரி மேற்கொள்ளும் உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: