சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த மார்ச் மாதம் கணக்கின்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 5.5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் 1.8 லட்சம் வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களிலும் உயர் நீதிமன்றங்களிலும் 30 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள நிலுவை வழக்கிகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் சுமார் 4.5 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. ஆனால், தற்போது 52 நீதிபதிகள் மட்டமே உள்ளனர். இந்த மாதம் இறுதியில் மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஓய்வு பெறுவதால் நீதிபதிகளின் எண்ணிக்கை 51 ஆக குறைந்துவிடும். 24 நீதிபதிகளின் பதவிகள் காலியாக உள்ளன. நீதிபதிகளின் காலி பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தும் அதை அமல்படுத்தாமல் ஒன்றிய அரசு மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 87,115 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், உச்ச நீதிமன்றத்தின் எண்ணிக்கையை தலைமை நீதிபதியையும் சேர்த்து 38 ஆக உயர்த்தி ஜனாாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் காலி பணியிடங்களை கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் நீதிமன்றம் திறக்கப்படுவதற்கு முன்பாக நிரப்ப வேண்டும்’ என்றார்.
