மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:நான் தொடங்கிய பல முயற்சிகளையும் திட்டங்களையும் முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. ஒரு அமைச்சராக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில், தொடங்கிய சீர்திருத்தங்களும் புதிய முயற்சிகளும் இன்னும் நிறைவடையவில்லை. அதனால், 2026ம் ஆண்டில் அரசியலிலிருந்து விலகும் என் ஆரம்பத் திட்டத்தை ஒத்திவைத்து, மீண்டும் கட்சியிடம் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்து, முடியாமல் போன பணிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.
ஆனால், தேர்தல் முடிவுகளால் அந்த நம்பிக்கை இப்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சில வாரங்களுக்கு பொதுவான குடிமகனாக, என் நேரத்தையும் அட்டவணையையும் முழுமையாக நான் கட்டுப்படுத்தக்கூடிய ஓய்வை எதிர்நோக்கி இருக்கிறேன். குறைந்தபட்சம் அடுத்த தேர்தல் வரை. ஆனால் பொதுச்சேவைக்கும், மாற்றத்தை உருவாக்கும் ஆவலுக்கும் எந்தக் குறையும் இல்லை. நான் மீண்டும் வருவேன், புத்துணர்ச்சியுடனும் புதிய சக்தியுடனும்.
