நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (41). கொத்தனார். இவரது மனைவி சுதா (37). இவர்களுக்கு பிரவீனா (15), ஷிவானி (12) என, இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் நேற்று கன மழை பெய்தபோது, கருப்பையா வீட்டின் அருகே சென்ற உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு நின்றிருந்த கருப்பையா மீது மின்சாரம் பாய்ந்ததால், அவர் அலறியுள்ளார். இந்த கூச்சல் கேட்டு மனைவி சுதா அவரை காப்பற்றச் சென்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களது வீட்டின் கீழ்தளத்தில் முத்துப்பாண்டி – மாரியம்மாள் தம்பதியினர் வசிக்கின்றனர். இவர்களின் மகனான கல்லூரி மாணவர் சுப்பிரமணியசிவா (18) வீட்டின் மாடியில் இருந்து கருப்பையா மற்றும் அவரது மனைவி ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டு அவர்களை காப்பாற்றச் சென்றுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில், அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த செம்பட்டி போலீசார், மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
