அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லை திமுக-அதிமுக கூட்டணி என்பது கிசுகிசு தான்: திருமாவளவன் பேட்டி

 

சென்னை: திமுக-அதிமுக கூட்டணி குறித்து என்னிடம் அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லை. அது கிசுகிசு தான் என திருமாவளவன் தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக-அதிமுக கூட்டணி என்பது கிசுகிசு என்று தான் சொன்னேன்.

அது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. யாரும் தனிப்பட்ட முறையில் அதிகாரப்பூர்வமாக கட்சி தலைவர்கள், இப்படி முயற்சி எடுக்கிறோம், ஆதரவு தாருங்கள் என்று கோரவில்லை. மூடப்பட்ட அறையில் ஏதும் பேசவில்லை. 10 பேர் இருக்கும் இடங்களில் பேசப்பட்டது. இப்படி பேசுவது தவறு என்று சொல்கிறேன். கூட்டணி கட்சி தலைவர்கள் திமுக தலைவரை சந்தித்தோம், கூட்டணியில் தொடர்கிறோம். அதனால் சந்தித்து இருக்கிறோம். நாளை கூப்பிட்டாலும் சந்திப்பேன்.

தவெக ஆட்சி அமைப்பதற்காக மட்டுமே எங்களுடைய ஆதரவு அளித்து இருக்கிறோம். ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது, மறுதேர்தல் வந்துவிடக் கூடாது என்பதாலும் எங்களுடன் பயணித்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் எல்லாம் ஆதரவு அளித்துள்ளன. 2 இடங்களில் ஒரு ஆட்சி அமைவதை விசிக தடுத்து நிறுத்தியது என்ற குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது என்பதால் பொறுப்பு உணர்வுடன் அந்த முடிவை எடுத்தோம். நிபந்தனையற்ற ஆதரவு, அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று வெளியில் இருந்து ஆதரவு என்று தெரிவித்துவிட்டோம்.

ஆனால் எங்கள் இயக்க தோழர்கள் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும் கட்சி தலைவர் என்ற முறையில் தவெகவுக்கு ஆதரவு. ஆனால் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று அறிவித்தேன். எங்களுக்கு எந்த ஆசையும் கிடையாது. 2 சீட்டை வைத்துக் கொண்டு இங்கேயும் அங்கேயும் சென்று பேரம் பேசவில்லை. தவெகவில் பேரம் பேசும் அளவிற்கு அணுகல் கிடையாது.

தமிழக அரசியல் சமூகநீதி மண் என்றாலும், பெரியார் மண் என்று சொன்னாலும் இன்னும் சாதிய இறுக்கத்தில் இருந்து விடுபடாத மாநிலம். இங்கு அவ்வளவு இலகுவாக தலித் ஒரு முதல்வர் ஆகிவிட முடியாது. இது எல்லாம் உணர்ந்தவன் நான். யார் சொல்வதையும் கேட்டு கற்பனையில் வாழமாட்டேன்.

அதிமுக ஒரு ஊழல் கட்சி என முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார். மேலும் என்டிஏ கூட்டணியில் இருந்த கட்சி பிஜேபி உடன் தீவிரமாக நட்புடன் இருக்கும் கட்சி. அதில் இருந்து சிலர் கட்சியை உடைத்துக் கொண்டு வந்து இந்த ஆட்சிக்கு ஆதரவு தருவது எங்களுக்கு பிரச்னை இல்லை. அது அவர்கள் உட்கட்சி விவகாரம். அது குறித்து எங்கள் கட்சி உயர்நிலை குழுவில் ஆலோசனை செய்து பேசுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: