சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் கூடிய ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து துறையின் உயர் அதிகாரிகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் ஆனந்த் ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநில அரசின் திட்டங்களான ஊரக குடியிருப்பு திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களாகிய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், கிராம சாலைகள் திட்டங்கள், நபார்டு சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய மத்திய அரசு திட்டங்களாகிய பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது.
கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் குறித்தும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் 15வது நிதிக் குழு மானியம், உத்தேசிக்கப்பட்டுள்ள 16வது நிதிக் குழு மானியம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுபோல, நீர்வளத்துறையின் பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக தொழில்துறை கூட்ட அரங்கில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா தொழில் துறை செயலாளர் விஜயகுமார் முன்னிலையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும் ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று அவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
