சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. சென்னையில் இரண்டு நாட்கள் மிதமான வெயில் அடித்தாலும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதன வசதி பயன்படுத்துவதால் அதிக மின் தேவை ஏற்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும், புகார்கள் அளித்தாலும் உடனடி நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்றல் நகர், துர்க்கை அவென்யூ, ஐஸ்வர்யா நகர், ஆண்டாள் நகர் ஆகிய பகுதிகளில் இரவு 9 மணி முதல் 12 மணி நேரம் வரை அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தபோது, அப்பகுதிகளில் சில தனியார் கம்பெனிகள் உள்ளதாகவும் அவர்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால் மின் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும், கேபிள்களை மாற்ற வேண்டி நிலையில், புதிய கேபிள்கள் இதுவரை வரவில்லை என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, இந்த பகுதியில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் பொதுமக்கள் தூக்கமின்றி தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்னைக்கு மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
