சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதல்வர் விஜய் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் விஜய், உரிய அரசு துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொள்ள உத்தவிட்டுள்ளார்.
