சென்னை: திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், மாநில சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரில், மதுரையை சேர்ந்த மாதன் வடிவேல் என்பவர் அறிமுகம் கிடைத்தது. அவர், நான் கம்போடியா நாட்டில் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வருவதாக தெரிவித்ததன்படி, நான் அவர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு கம்போடியாவில் உள்ள அவரது உணவகத்திற்கு வேலைக்கு சென்றேன். ஆனால் அவர் உணவகத்தில் வேலைக்கு அனுப்பாமல் கம்போடியாவில் வெளிநாட்டு சைபர் மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் என்னை விற்பனை செய்தது தெரியவந்தது.
அப்போது என்னை ஆன்லைன் நிதி மோசடி மற்றும் சைபர் குற்ற செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தினர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்து கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் இந்தியா திரும்பியுள்ளேன். எனவே என்னை போல் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு உணவகத்தில் வேலை என சைபர் மோசடி கும்பலிடம் பல இளைஞர்களை விற்பனை செய்த மாதன் வடிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
இந்த புகாரின்படி, மாநில சைபர் க்ரைம் டிஜிபி பால நாகதேவி உத்தரவுப்படி விசாரணை நடத்திய போது, மதுரையை சேர்ந்த மாதன் வடிவேல் கம்போடியாவில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் 4 உணவகங்கள் நடத்தி வந்தது தெரியவந்தது.
இவர் மோசடி நபர்களுக்கு ஆட்களை பிடித்து கொடுத்தும், கம்போடியா, லாவோஸ், வியட்நாம் நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் செயல்பட்ட வெளிநாட்டு நபர்கள், டிக்கெட் முகவர்கள், குடிவரவு அதிகாரிகள் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுடன் இணைந்து மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து மதுரையை சேர்ந்த மாதன் வடிவேல் என்பவரை மாநில சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.
