கொள்கை அரசியலில் திமுக என்றும் தோற்றது கிடையாது: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

 

தஞ்சாவூர்: கொள்கை அரசியலில் திமுக என்றைக்குமே தோற்றது கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ இல்லத்திருமண விழா தஞ்சாவூர் மகாராஜா மஹாலில் நேற்று காலை நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மணமகள் திருவாரூர், மணமகன் திருச்சி மாவட்டம். திருமணம் நடைபெறும் இடம் தஞ்சாவூர்.

மொத்தத்தில் ஒட்டுமொத்த டெல்டாவும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து இந்த திருமண விழாவை நடத்துகிறது. யார் எந்த பக்கம் போனாலும், எந்த மாவட்டம், எந்த முடிவு எடுத்தாலும், டெல்டா எப்போதுமே திமுக பக்கம் தான் என்பதை நிரூபித்து காட்டிய அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற லட்சக்கணக்கான கட்சி குடும்பங்கள் இருப்பதால் தான் திமுக எவ்வளவு பெரிய புயலை சந்தித்தாலும் திரும்ப திரும்ப மீண்டும் எழுந்து வருகிறோம்.

இந்த திருமணத்தில் இருக்கக்கூடிய எழுச்சியையும் உங்களது மகிழ்ச்சி, உற்சாகத்தை பார்க்கும்போது நமது தலைவர், நமது திமுக மீண்டும் வெற்றி வாகை சூடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. கலைஞர் சொன்னதுபோல் திமுக வெறும் அரசியல் இயக்கம் கிடையாது. வெறும் கட்சி கிடையாது. அது ஒரு சமுதாய இயக்கம். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். மற்ற கட்சிகளை தான் அதெல்லாம் பாதிக்கும். சமுதாய இயக்கம், திமுக எப்போதும் போல மக்கள் பணிகளை தொடர்ந்து நாங்க செய்து கொண்டிருப்போம். தலைவரின் வழிகாட்டுதலின்படி அதை தொடர்ந்து செய்வோம்.

தேர்தல் அரசியலில் நாம் தோற்றிருக்கோமே தவிர, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கோமே தவிர, கொள்கை அரசியலில் திமுக என்றைக்குமே தோற்றது கிடையாது, தோற்கவும் மாட்டோம். ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நமது தலைவர் எப்போதும் சொல்வது போல நாம் உழைப்போம். தமிழ்நாட்டுக்கு வரும் ஆபத்துகளை நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். மாநில உரிமைகளை காப்போம். இந்த 10 நாட்களிலேயே மக்கள், பெண்கள், இளைஞர்கள் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணர்ந்திருப்பாங்க. போகப்போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரியவரும். இவ்வாறு அவர் பேசினார்.

*‘கிலுகிலுப்பை ஆட்டுகிறவன்கிட்ட போன குழந்தை தாயிடம் திரும்பும்’

”கலைஞர் சொன்ன ஒரு உதாரணத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். தாயின் பாதுகாப்பில் இருக்கக்கூடிய ஒரு குழந்தை, கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காண்பிக்கும் நபரை பார்த்து நிச்சயம் மயங்கும், மகிழ்ச்சியடையும். தாய் கிட்ட இருந்து தாவி அந்த கிலுகிலுப்பை ஆட்டுறவன்கிட்ட கொஞ்ச நேரம் போய் உட்கார்ந்துக்கும். ஆனா, அந்த குழந்தை கிலுகிலுப்பை காட்டுறவன்கிட்ட நிரந்தரமாக இருக்காது. கொஞ்ச நேரத்துக்கு பிறகு அதுக்கு உண்மையான பாசம்னா என்னன்னு தெரியும். தாயின் முகத்தை நிச்சயம் தேடி பார்க்கும். தாய்கிட்ட தான் மீண்டும் திரும்பி வரும்.

அது மாதிரி இப்போது கவர்ச்சி, மாயாஜாலத்தை காண்பித்து மக்களை சிலர் ஈர்த்துள்ளனர். இந்த கவர்ச்சி மக்களின் கஷ்டத்தை போக்காது. அடிப்படை பணிகளை நிறைவேற்றாது. எந்த பிரச்னைக்கும் அது தீர்வு காணாது. தாயின் அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்பதை அந்த குழந்தை மீண்டும் உணர்ந்து தமிழ்நாட்டுக்கு தாயாக இருக்கக்கூடிய நமது கழகத்தை, நமது தலைவரை நோக்கி நிச்சயம் விரைவில் வரும். நமது தலைவர் சொன்னதுபோல சூரியன் ஒருபோதும் மறையாது. அது மறுபடியும் உதிக்கும். அதன் ஒளியில் தமிழ்நாடு மீண்டும் செழிக்கும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Related Stories: