தகிக்கும் வெப்பம், கோடை விடுமுறையால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்து மகிழும் மக்கள்

நெல்லை : பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதோடு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்பே தகிக்கும் வெப்பதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் மக்கள் குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக வந்து குளித்து மகிழ்கின்றனர். நெல்லையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்பே நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் கொடுமை மிகவும் அதிகமாக உள்ளது. காலை 9 மணிக்கே துவங்கும் அனலின் தாக்கம் மாலை 5 மணிக்கு மேலாக நீடிக்கிறது. அத்துடன் மதியம் வீசும் வெப்பக் காற்றால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

வெளியே எங்கும் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் விடுமுறை நாளான நேற்று மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ந்த நீர்நிலைகளை தேடிச் சென்றனர். நெல்லை மக்களின் பெரிய வரமாக தாமிரபரணி ஆறு ஓடுகிறது.

இங்குள்ள குறுக்குத்துறை ஆற்றுப் பகுதிக்கு நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கும், குளிர்ந்த ஆற்று நீருக்கும் இடையே நடக்கும் போட்டியில் குளிர்ந்த நீரே வென்றது. ஆற்றில் இறங்கிய உடன் உடலை தழுவிய சில்லென்ற தண்ணீர் மக்களின் சோர்வை முழுதாக நீக்கியது. வெப்பத்தின் தாக்கத்தை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தந்தது.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் குடும்பமாக ஆற்றில் திரண்டனர். சிறுவர் சிறுமிகள் ஆற்றில் குதித்து உற்சாகமாக விளையாடினர்.

ஒருவருக்கு ஒருவர் தண்ணீரை வாரி இறைத்து தங்கள் மிகழ்ச்சியை காட்டினர். சிறுவர்கள் தண்ணீரில் குதித்து விளையாடி மகிழந்த ரம்மியமான காட்சியை முதியவர்கள் கரையில் அமர்ந்து ரசித்தனர்.

பெரியவர்களும் தங்களின் அன்றாட வேலைப் பளுவை மறந்து குழந்தைகளாக மாறி ஆற்றில் குளித்து மகிழந்தனர். குறுக்குத்துறை முருகன் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் குளிப்பதற்காக அதிகமாக கூடினர்.

நீண்ட நேரம் ஆற்றில் குளித்து மகிழந்த மக்கள், பின்னர் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினர். வெயிலின் கொடுமை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்பதால், ஆற்றில் குளிக்கும் மக்களின் கூட்டம் இனி வரும் நாட்களிலும் மேலும் கூடும் என தெரிகிறது. தகிக்கும் வெயிலுக்கு நடுவே தாமிரபரணி ஆறு நெல்லை மக்களின் ஆறுதலாக மாறி உள்ளது.

Related Stories: