*2 நாட்களில் 8 ஆயிரம் பேர் வருகை
பொள்ளாச்சி : பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொள்ளாச்சியை அடுத்த அழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.
கடந்த 2 நாட்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சுற்றுலா பகுதியில் ஒன்றான ஆழியார் அணைக்கு,தினமும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த மார்ச் மாத துவக்கத்திலிருந்து கடந்த 16ம் தேதி வரை பள்ளிகளில் ஆண்டிறுதி தேர்வு நடைபெற்றதால் அந்நேரத்தில் ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
ஆழியார் அணைக்கு வழக்கமாக விடுமுறை நாட்களில் சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகளும். மற்ற நாட்களில் சுமார் 2500க்கும் மேற்பட்ட சுற்றுலா. பயணிகளும் வந்து செல்வார்கள், அனால், கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக ஆழியார் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு இருந்தாலும், பிற நாட்களில் 800க்கும் குறைவான சுற்றுலா பயணிகளே வந்துள்ளனர்.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இறுதியாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டதாலும், சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்ததாலும் கடந்த சிலநாட்களாக ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
அதிலும் கடந்த இரண்டு நாட்களாக கோவை சுற்றுவட்டார பகுதியிலிருந்து மட்டுமின்றி வெளி மாவட்ட பகுதியிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அதிகளவில் வந்திருந்தனர்.
அவர்கள், அணைக்கு செல்வதற்காக வால்பாறை ரோட்டின் ஒரு பகுதியில் உள்ள கவுண்டரில் டிக்கெட் எடுத்து சென்றனர். இங்கு வந்த சுற்றுலா பயணிகள், அணையின் மேல்பகுதியில் வெகு நேரம் சுற்றிபார்த்துவிட்டு, பின் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் அணைக்கு முன்புள்ள பூங்காவில் பல மணிநேரம் பொழுதை கழித்தனர்.
சுமார் ஒன்றரை மாதத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் போலீசார் அங்காங்கே நின்று கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இருநாட்களிலும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
