அமராவதி அணை நீர்மட்டம் 21.49 அடியாக சரிவு

உடுமலை :அமராவதி அணை நீர்மட்டம் 21.49 அடியாக குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பகுதிக்கு ஆற்று வழியாகவும்,புதிய ஆயக்கட்டு பகுதிக்கு பிரதான கால்வாய் வழியாகவும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை காரணமாக பாம்பாறு, தேனாறு, கூட்டாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து, தூவானம் அருவி வழியாக அணைக்கு தண்ணீர் வந்து சேருகிறது. தற்போது, கோடை காலம் என்பதால் நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

அமராவதி அணையில் நேற்று காலை நீர்மட்டம் 21.49 அடியாக இருந்தது. நீர்வரத்து இல்லை. 15 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கினால் தான் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். தற்போதுள்ள நீர்மட்டத்தில் பாதி அளவுக்கு மேல் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

Related Stories: