*ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் படகு சவாரி
ஜோலார்பேட்டை : கோடை வெயில் சுட்டெரிப்பதால் ஏழைகளின் ஊட்டி ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதில் விடுமுறை தினமான நேற்று ஏராளமானோர் உற்சாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் எப்போதும் குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவுவதால், ஏழைகளின் ஊட்டியாக விளங்கி வருகிறது.
இதனால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் ஏலகிரிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்திருந்தது.
இங்கு உள்ள சிறுவர் பூங்கா, படகு துறை, இயற்கை பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களையும், தனியார் பொழுதுபோக்கு கூடங்களிலும் பயணிகள் கூட்டம் கூட்டமாக பல்வேறு சாகச விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும் விடுமுறை என்பதால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் அதிகளவில் பொதுமக்கள் ஏலகிரி மலைக்கு சென்றனர். மேலும் குழந்தைகளுக்கு தேவையான பொருள் உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்தும் பொழுதுபோக்கு பூங்காக்களில், சிறுவர்கள் பூங்காவில் குழந்தைகளை விளையாட செய்தும் மகிழ்ந்தனர்.
தொடர்ந்து புங்கனூர் படகு துறையில் உள்ள படகில் குடும்பத்துடன் சவாரி செய்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் நிலாவூர் அருகே உள்ள தீம்ஸ் பார்க்கில் 22 கேம்ஸ்களுக்கும் மேலாக உள்ள கேம்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி ராட்டினத்தில் சுற்றியும் நீச்சல் குளத்தில் கோடையில் வெப்பத்தை தணித்தும் மகிழ்ந்தனர்.
இந்நிலையில் சுற்றுலா தளத்தில் உள்ள பிரதான சாலையோரங்களில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏலகிரி மலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
