லாலாப்பேட்டை பகுதிகளில் சவுக்கு மரம் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்

லாலாப்பேட்டை : லாலாபேட்டை பகுதிகளில் சவுக்கு மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் கரூர் மாவட்டம் லாலாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கள்ளப்பள்ளி பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, வயலூர், சிந்தலவாடி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, வீரியம்பாளையம் பகுதிகளில் விவசாயிகள் சவுக்கு மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கும் மேல் சவுக்கு மரம் வளர்ப்பு சாகுபடி யில் ஈடுபட்டுள்ளனர்.

நெல், கரும்பு, காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் தற்போது சவுக்கு மரம் வளர்ப்பு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சவுக்கு மரம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட மரப்பயிராகும்.

சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய, பசுமை மாறா அழகிய தோற்றம் கொண்ட, ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும். கடற்கரைப்பகுதிகளில் நன்கு வளரும் இயல்பை உடையது. ச வுக்கு வறட்சியைத் தாங்கிக்கொண்டு வளரக்கூடிய மரமாக இருப்பதால் வறட்சியான பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

சவுக்கு மரம் நாட்டு வகைகளை தவிர கப்பாளங்-குப்பாங், திமுர், சுங்குனியானா என்ற ரகம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மணல், வண்டல்மண், செம்மண் நிலங்கள் ஏற்றவை. அமிலத்தன்மை உள்ள களிமண்ணிலும், காரத்தன்மை மிக்க சுண்ணாம்புச் சத்துள்ள மண்ணிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது.

சவுக்கிற்கு வடிகால் வசதியுள்ள மணல் பாங்கான நிலங்கள் மிகவும் உகந்தவை. நிலத்தை நன்கு உழுது, மண்ணின் தன்மையைப் பொறுத்து 2 டன் தொழு உரம் இட வேண்டும். சவுக்கு நடவுக்கு ஐப்பசி, கார்த்திகை (அக்டோபர்-நவம்பர்) மாதங்கள் ஏற்றவை.

சவுக்கு சாகுபடிக்காக தேர்வு செய்யும் நிலத்தை 5 மாதங்கள் காயப்போட வேண்டும். பிறகு ஏக்கருக்கு இரண்டு டன் அளவில் தொழுவுரத்தை இட்டு மூன்று அல்லது நான்கு முறை உழவு செய்ய வேண்டும். தயார் செய்துள்ள நிலத்தில் 0.30×0.30×0.30மீ அளவுள்ள குழிகளை 1மீ x 1மீ அல்லது 2மீ x 2மீ இடைவெளியில் எடுக்க வேண்டும்.

குழிகளில் தொழுஉரம் மற்றும் மண்புழு உரம் இடுவது வளர்ச்சியை மேலும் கூட்ட உதவும். நட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். முதல் 6 மாதங்களுக்கு வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுவது அவசியம். மரம் வளர்ந்த பிறகு வறட்சியைத் தாங்கும்.நடவு செய்யப்பட்ட, முதல் 2-3 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 3 மீட்டர் உயரம் வரை வளரும்.

சவுக்கு மரத்தின் வேர் முடிச்சுக்கள் நைட்ரஜனை தக்க வைக்கும் திறன் உடையவை. எனவே ஒரு ஹெக்டருக்கு 40-50 கிலோ யூரியாவை சமகால இடைவெளியில் இடவேண்டும். ஒரு எக்டருக்கு 150 கிலோ சூப்பர்பாஸ்பேட், முயூரியேட் பொட்டாஸ் 100 கிலோ ஆகியவற்றை 4 முதல் 5 கால இடைவெளியில் சமப்பகுதியாக பிரித்து கொடுக்க வேண்டும்.

நடவு செய்யப்பட்ட முதல் ஆண்டு மட்டும் களை எடுப்பது அவசியம். அதன் பின் மரத்திலிருந்து விழும் சிறு கிளை துண்டுகள் போர்வை போல அமைந்து களைகளின் வளர்ச்சியை முழுக்க கட்டுப்படுத்துகிறது. மரத்தின் முக்கால் பகுதிக்கு கீழ் உள்ள பக்கக்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

இதன் மூலம் 6-12 மாதங்களில் நல்ல கழிகள் கிடைக்கும்.இம்மரத்தை 3 முதல் 5 ஆண்டுகளில் தேவைக்கேற்ப வெட்டலாம். கழிகள் மற்றும் விறகுக்கு 3 ஆண்டுகளிலும், சிறு நாற்காலிகள், மரத் தளவாடப் பொருள்கள், சிறு கருவிகள், நீண்ட கழிகளுக்கு 5 ஆண்டுகளிலும் வெட்ட வேண்டும்.

மூன்று ஆண்டுகளில் 4 x 4 அடி இடைவெளியிலோ 5 x 5 இடைவெளியிலோ நடுவதன் மூலம் ஒரு எக்டருக்கு 125 முதல் 150 டன் பெறலாம் எனவே சவுக்கு மரம் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Stories: