*சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்
சேந்தமங்கலம் : கொல்லிமலை அடிவாரம் புளியஞ்சோலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட எல்லையில், திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து சுமார் 25 கிமீ, மீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக புளியஞ்சோலை உள்ளது. இப்பகுதி கொல்லிமலையில் தெற்கு அடிவாரப் பகுதியாக உள்ளது.
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, தண்ணீர் முழுவதும் வனப்பகுதி வழியாக சென்று புளியஞ்சோலை பகுதிக்கு வந்து, பெரிய தடாகத்தில் தேங்கி, பின்னர் ஆறாக ஓடுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விடுமுறை நாட்களில், புளியஞ்சோலை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, ஆற்றில் குளித்து விட்டு செல்கின்றனர். வனத்துறை எல்லைப்பகுதியில் இருந்து ஆற்றுக்கு சுமார் 2 கிமீ., தூரம் நடந்து செல்ல வேண்டும்.
சோதனை சாவடியை கடந்து ஆற்று பகுதிக்கு செல்ல, போதிய சாலை வசதி இல்லாததால், கரடுமுரடான பாதையில் சுற்றுலா பயணிகள் ஆற்றுக்கு சென்று குளித்து வருகின்றனர். நடந்து செல்லும் போது, கால் தவறி கீழே விழும் நிலை இருந்து வருகிறது. மேலும், அப்பகுதியில் உடை மாற்றும் அறை இல்லாததால் ஆற்றில் குளிக்க வரும் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நீண்ட தூரத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, சாலை வசதியுடன் ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘விடுமுறை நாட்களில் திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். மூலிகை வளம் நிறைந்த பகுதியில் ஆற்றில் வரும் தண்ணீரில் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் இப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், மீன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் பயன் பெற்று வருகிறது. எனவே, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் செய்து கொடுக்க வேண்டும்,’ என்றனர்.
